தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 3/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சிறிது
பூர்ணத்திற்கு…
பாசிப்பருப்பு – 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் நாட்டுச் சர்க்கரையையை வெதுவெதுப்பான நீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். ஏனெனில் சுடுநீர் பயன்படுத்துவதால், மிகவும் சூடாக இருக்கும். பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து அதில் தண்ணீரை ஊற்றி, மென்மையாக வேக வைக்க வேண்டும். பின் அதனை நன்கு மசித்து, பின் அதில் வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்க விடும் போது, அதில் உள்ள நீர் முற்றிலும் வற்றியதும், நெய் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் பிரட்டி குளிர விட வேண்டும்.
பிறகு வாழை இலையை சதுரங்களாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, எலுமிச்சை அளவு பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, பின் வட்டமாக தட்டி, அதன் ஒரு பாதியில் பாசிப்பருப்பு கலவை சிறிது வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். அப்படி மடிக்கும் போது, முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின் இட்லி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். அதற்குள் இட்லி தட்டில் மடித்து வைத்துள்ள வாழை இலைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-12 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழை இலைக் கொழுக்கட்டை ரெடி!!!