கடும் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
கடுமையான வெயிலில் அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்களை நடத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், பொதுக்கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்த தகவல்கள் வெளிவந்ததாலும், இந்திய தேர்தல் ஆணையம் தற்போது கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆயினும் இதை உத்தரவாக தேர்தல் ஆணையம் பிறப்பிக்காததால் அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறபப்டுகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ‘கடும் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதால், உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து புகார் வந்து கொண்டிருப்பதால் கடும் வெயில் நிலவும் நேரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். மேலும், பொதுக்கூட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள், கூட்டம் நடைபெறும் இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும். குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கூட்டங்களில் பங்கேற்க வரும் பொதுமக்களின் நலன் கருதி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.