ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்வது போன்று இனிமேல் தேர்தலில் வாக்களிக்கவும் முன்பதிவு செய்யலாம். இத்தகையை புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருவது பற்றி தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி வாக்காளர்கள், தேர்தல் நாளன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் வாக்களித்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு எந்த நேரம் வசதிப்படுமோ, அந்த நேரத்தை, முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் பதிவு செய்த நேரத்திற்கு சரியாக வந்து வாக்களிக்கலாம். இதனால் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த புதிய வசதியை காலை 8 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வாக்களிக்கும் நேரத்தை முன்பதிவு செய்ய முடியாது.
மேலும் தொழில் நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வெளியூரில் வாழும் மக்களை எவ்வாறு வாக்களிக்க வைப்பது என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், இத்தகைய வாக்காளர்களின் எண்ணிக்கையை தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட சில துறைகளிடம் தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.