நான் பேச ஆரம்பித்தால் விஷால் அணியினர் தாங்க மாட்டார்கள். சரத்குமார் ஆவேசம்

நான் பேச ஆரம்பித்தால் விஷால் அணியினர் தாங்க மாட்டார்கள். சரத்குமார் ஆவேசம்
sarathkumar
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் சரத்குமார் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதிகா, சிம்பு, ஷாம், , ராதாரவி, விஜயகுமார், தியாகு, ராம்கி, அசோக், நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சரத்குமார், “நடிகர்கள் ஒரே குடும்பமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் தேர்தல் வந்துவிட்டதால் தேர்தல் சார்ந்த வியூகம், நடிக-நடிகைகளை சந்தித்து நேரில் ஓட்டு சேகரிப்பது குறித்தான ஆலோசனையே இன்று நடத்தப்பட்டது.

நடிகர்கள் இடையே பிரச்னையோ பிரிவோ வரக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். ஆனாலும் என்னைப் பற்றி எதிரணியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர் அவதூறாக பேசுவதுமட்டுமில்லாமல் ஊழல் புகார் சொல்கின்றனர். இதையெல்லாம் கேட்கும் போது நெஞ்சு வலிக்கிறது.

கடந்த காலத்தில் நடிக – நடிகைகள் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன். கஷ்டப்பட்டு உழைத்தேன். உறுப்பினர்களுக்காக உழைப்பது கடமை. நடிக சங்க கடனை விஜயகாந்துடன் இணைந்து அடைத்தோம். மீண்டும் கடன் வரக்கூடாது என்பதற்காக நிறைய ஆலோசனைகளை நடத்தினோம்.

அந்த ஆலோசனையில், மாதம் ரூ26 லட்சம் வாடகை வரக்கூடிய நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நல்லதொரு ஒப்பந்தம் போடப்பட்டது. 29 ஆண்டுகள் 11 மாதம் என்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்கு திட்டமிட்டோம். செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெற்றப்பட்டது.

அப்போது இந்த ஒப்புதல் வேண்டாம், நாங்களே நிதி திரட்டி கட்டிடம் கட்ட ஆவணம் செய்கிறோம் என்று சொல்லியிருந்தால், அந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றிருப்பேன். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் கையெழுத்து வேட்டை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளித்தது.

நடிகர் சங்க உறுப்பினர்களுகாக உண்மையாக உழைத்திருக்கிறேன். ஆனாலும் என்னைப் பற்றி முறைகேடு செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள். தொடர்ந்து இதுபோல் பேசினால், 10 நாட்களில் அவர்களைப் பற்றியான உண்மை ரகசியங்களை வெளியிடுவேன். என் மனதை திறந்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேருக்கு சிக்கல் வரும்.

நேர்மையான முறைப்படி தேர்தல் நடக்கும். என் அணி நிச்சயம் வெற்றிபெறும். என் அணிசார்பில் துணைத் தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் போட்டியிடுகிறார்கள். மற்ற வேட்பாளருக்கான லிஸ்ட் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும்” என்று பேசினார் சரத்குமார்.

Leave a Reply