சினிமா அனுபவமே இல்லாமல், சினிமாவை பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் திடீரென இயக்குனராக மாறி ஒரு படம் எடுத்தால்கூட இதைவிட மோசமாக ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு ஒரு காட்சியை கூட ரசிக்க முடியாத அளவிற்கு ஒரு திரைப்படம் வெளிவந்து சாதனை படைத்தது என்று சொன்னால் அது அனேகமாக இந்த ‘எலி’யாகத்தான் இருக்கும்.
சிகரெட்டுக்களை கடத்தும் கொள்ளைக்கார கும்பலை பிடிக்க போலீசாரால் அனுப்பப்படும் உளவாளி வடிவேலு, அந்த கூட்டத்தில் ஒரு அடியாளாக வேலைக்கு சேர்ந்து அந்த கும்பலை கூண்டோடு போலீஸுக்கு பிடித்து கொடுக்கும் அரதப்பழசான கதை.
வடிவேலு திரையில் தோன்றினாலே போதும், வசனமே பேசாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஒரு பெரிய நகைச்சுவை கலைஞனை இந்த படத்தில் காமெடி பீஸாக மாற்றியுள்ளனர். வடிவேலுவை சொல்லி குற்றமில்லை. தனக்கு கொடுத்த காட்சிகளை அவர் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்துள்ளார். ஆனால் திரைக்கதையில், காட்சி அமைப்புகளில் வலுவில்லாததால் அவருடைய நடிப்பு விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிடுகின்றது.
ஜெயம் படத்தில் அறிமுகமாகி, ஷங்கரின் நாயகியாக பதவியுயர்வு பெற்ற நாயகி சதா, இந்த படத்தில் வடிவேலுவுடன் ஒரு குத்துப்பாட்டுக்கும், ஒரு டூயட் பாடலுக்கும் மட்டும் நடித்துள்ளார். இரண்டு பாடல்களில் மட்டும் ஆடிவிட்டால் அவர்தான் படத்தின் கதாநாயகி என்று இயக்குனர் கூறுவார். அதையும் நாம் நம்பித்தொலைக்க வேண்டும்.
இயக்குனர் யுவராஜ், ஆடியன்ஸ்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டாரா? என்று தெரியவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசில காட்சிகள் தவிர படம் முழுவதும் காமெடி பஞ்சம். கதாநாயகன் தான் காமெடி பண்ணுகிறார் என்றால் வில்லனும் சேர்ந்து காமெடி செய்வதை தாங்க முடியவில்லை. படத்தில் விறுவிறுப்போ, டுவிஸ்ட்டோ, திருப்பமோ, அல்லது புதுமையோ மருந்துக்கு பார்க்க முடியவில்லை. முதல் நாளிலேயே இடைவெளிக்கு பின்னர் சில நிமிடங்களில் ஆடியன்ஸ்கள் ஒருசிலர் தியேட்டரை விட்டு வெளியே செல்வதை இந்த படத்தில்தான் பார்க்க முடிந்தது.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் சுமார்தான். இருப்பினும் பழைய காலத்து பின்னணி இசையை கொண்டு வந்து ரசிக்கும்படி செய்துள்ளார். ஒளிப்பதிவும் குறை வைக்கவில்லை. குறிப்பாக அந்த இந்திப் பாடலை படமாக்கிய விதம் அருமை.
இதற்கு மேல் இந்த படத்தை பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை. இந்த படத்தை டிவியில் போட்டால்கூட முழுசாக பார்ப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
“எலி”, நமக்கு தருவது பெரிய தலை “வலி”.