டொனால்ட் டிரம்பின் திடீர் பல்டி. அமெரிக்க அரசியல்வாதிகள் ஆச்சரியம்
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அதிபர் ஆனதும் இமெயில் விவகாரம் குறித்து தகுந்த விசாரணை நடைபெற்று ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என்று சூளுரைத்தார்.
ஆனால் தற்போது இமெயில் விவகாரம் குறித்து விசாரணை செய்யபோவதில்லை என்று திடீர் பல்டி அடித்துள்ளார். இது அமெரிக்க அரசியல்வாதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இதுகுறித்து டிரம்பின் ஆலோசகர் கெல்லியன் கான்வே கூறியதாவது:
அமெரிக்காவின் பெரும் பாலான மக்கள் ஹிலாரியின் நேர்மையின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைக்கவில்லை. இது அவருக்கு தெரிந்திருக்கும். ஆனால் இ-மெயில் விவகாரம் தொடர்பாக ஹிலாரி மீது விசாரணை நடத்தும் எண்ணம் டிரம்புக்கு இல்லை. இதன் மூலம் அவருக்கு உதவி புரிந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை தீட்ட வேண்டியதுள்ளதால் ஹிலாரியின் இமெயில் விவகாரத்தில் நேரத்தை செலவிட டிரம்ப் விரும்பவில்லை என்றும் அவருக்கு அமெரிக்காவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்றும் கெல்லியன் தெரிவித்துள்ளார்.