பனாமா பேப்பர்ஸ் புதிய பட்டியலில் ஹாலிவுட் நடிகை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த பனாமா பேப்பர்ஸ் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப், இந்திய நடிகர் அமிதாப்பச்சன், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் உள்பட பலரை சங்கடப்படுத்தியது.
இந்நிலையில் கணக்கில் வராத பணத்தை பனாமாவில் முதலீடு செய்தவர்களின் அடுத்த பட்டியலும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் ஹாரிபட்டர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த தகவலை பிரிட்டனில் இருந்து செயல்படும் இண்டிபெண்டன்ட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
எம்மா வாட்சன் ஃபாலிங் லீவ்ஸ் ( Falling Leaves Ltd) என்ற பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் ஒரு நிறுவனத்தை தொடங்கியதாகவும், அதன் மூலம் 2.8 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான வீடு ஒன்றை பிரிட்டன் தலைநகர் லண்டனில் அவர் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக இருக்கும் எம்மா வாட்சன், பனாமா நாட்டின் மொஸக் பொன்சேகா சட்ட நிறுவனம் வாயிலாக 2013-ம் ஆண்டு ஃபாலிங் லீவ்ஸ் நிறுவனத்தை துவக்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்மா வாட்சன் வெளிநாட்டு நிறுவனம் மூலம் பிரிட்டனில் சொத்து வாங்கியதை மறுக்காத அவரது செய்தித் தொடர்பாளர், “தனிப்பட்ட சுதந்திரத்துக்காகவே எம்மா அவ்வாறாக வெளிநாட்டு நிறுவனம் மூலம் வீடு வாங்கினாரே தவிர அதன் மூலம் வரிச் சலுகை ஏதும் அவர் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.