அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர். இப்படியே போனால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆவணக் காப்பகங்களாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லாததால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆவணக் காப்பகங்களாக மாறி வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நிலை மாறி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் நிச்சயம் வேலை கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்புக்குள் வராத அனைத்து அரசுத் துறை பணியிடங்களும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வந்தன. குறிப்பாக அதிக அளவில் பணியிடங்களைக் கொண்ட ஆசிரியர்கள், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி தான் நியமிக்கப்பட்டனர். ஆனால், மாநில அரசு, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்பும் போது வேலைவாய்ப்பகங்களிலிருந்து பதிவு மூப்பு அடிப்படையிலான பட்டியலைப் பெறுவதுடன், பொது அறிவிக்கை வெளியிட்டு அதன் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற்று தான் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது அனைத்துப் பணியிடங்களும் பொது அறிவிக்கை வெளியிடப்பட்டு அதனடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றன என்பதால் வேலைவாய்ப்பகங்கள் செயலிழந்து விட்டன.
பொது அறிவிக்கை மூலம் அரசுத் துறை பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில் இருப்பவர்களையும், நேரடியாக விண்ணப்பித்தவர்களையும் ஒரே மாதிரியாக கருதக்கூடாது. வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் பதிவு மூப்புக்கு ஏற்றவாறு தகுதிக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு ஏதேனும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ எந்தவிதமான வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை; தமிழக அரசும் அதற்காகக் கவலைப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் தங்களுக்கு வசதி என்று கருதி தமிழக ஆட்சியாளர்கள் நேரடியாக பணி நியமனங்களைச் செய்து வருகின்றனர். இதுதான் மிகப்பெரிய ஊழல்களுக்கு வழி வகுக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணி நியமனங்களை மேற்கொள்ளும் போது அதில் முறைகேடுகள் நடப்பதற்கோ அல்லது ஊழல் செய்யவோ வாய்ப்பு இல்லை. ஆனால், பொது அறிவிக்கை வெளியிட்டு நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்யும் போது பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன. அண்மையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமார் 7500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டதில் நடந்த ஊழலும், ரூ.4 லட்சம் கொடுத்தால் நடத்துனர் & ஓட்டுனர் வேலை என்று ஏலம் விடாத குறையாக விற்பனை செய்யப்பட்டதுமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். மற்ற அரசுத்துறை பணியிடங்களை நிரப்புவதிலும் இதேபோல் தான் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2006 முதல் 2014 வரை மொத்தம் 1.10 கோடி பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 31 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலில் 1.41 கோடி பேர் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இன்றைய நிலையில் வேலைவாய்ப்பகப் பட்டியலில் 84 லட்சம் மட்டுமே உள்ளனர். அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 11 லட்சம் பேர் பதிவை விலக்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு வழிகாட்டுவதே தமிழ்நாடு அரசு மற்றும் சார்புப் பணி விதி 10 அ (அ) பிரிவு தான். இவ்விதி செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது தான் அனைத்து சிக்கலுக்கும் காரணம் ஆகும். இந்த தீர்ப்பால் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்புக்கு அப்பாற்பட்ட எல்லா பணியிடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், இடஒதுக்கீடு விதிகளுக்குட்பட்டு நிரப்புவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அதற்கு அரசியல் சட்டத்தின் 309வது பிரிவின்படி சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதன்மூலம் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.