வேலைவாய்ப்புத் திறனில் தென் இந்தியர்களைவிட வட மாநிலத்தினர் முன்னணியில் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவல், ஆய்வறிக்கை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது, எந்தெந்த மாநிலங்களில் எந்தத் துறை நன்றாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து, பீப்பிள்ஸ்ட்ராங்க், வீபாக்ஸ் ஆகிய மனிதவள நிறுவனங்கள்,
தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சிஐஐ-யுடன் இணைந்து, ஓர் ஆய்வறிக்கையை கூட்டாக வெளியிட்டுள்ளன. இதில் சொல்லப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில், வட மாநிலங்களில் படித்த பட்டதாரிகள்தான் தென் மாநிலங்களில் அதிக அளவில் வேலையில் உள்ளனர் என்றும், தென் மாநிலங்களில் படித்துவரும் கல்லூரி மாணவர்களின் வேலை செய்யும் திறன் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருப்பதுதான்.
இது உண்மையா?, ஆம் எனில் இதற்கு என்ன காரணம்?, இதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்கிற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை.
‘கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்களில் சுமார் 34 சதவிகிதம்பேர்தான் வேலைக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இந்த சராசரியைவிட சில குறிப்பிட்ட துறை மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு அதிக தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, பி.பார்ம் (55%), பொறியியல் (52%), ஐ.டி.ஐ.கள் (47%) முடித்தவர்களிடம் வேலை செய்யும் திறன் இருக்கிறது. அதேநேரத்தில், பி.ஏ (19%), பாலிடெக்னிக் (12%) படித்த மாணவர்கள், வேலைக்கான தகுதியை மிகக் குறைவாக பெற்றிருப்பதாக இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிகிறது.
மேலும், வேலைக்கான தகுதி பெறுவதில் ஆண்களைவிட பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள். பெண்கள் 42 சதவிகிதமும், ஆண்கள் 33 சதவிகிதமும் வேலைக்கான தகுதியை பெற்றிருக்கிறார்கள். வேலை பார்க்கும் ஊரை தேர்வு செய்வதில் ஆண்கள் டெல்லியையும், பெண்கள் சென்னையையும் அதிகமாக விரும்புகிறார்கள்.
கணிதம், ஆங்கிலம், கணினி, துறை சார்ந்த அறிவு மற்றும் வேலையில் நடந்துகொள்ளும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்களின் வேலை திறன் பரிசோதிக்கப்பட்டதில் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டி ருக்கிறது.
அனைத்துப் பிரிவுகளிலும் அதிக வேலைவாய்ப்புத் திறன்கொண்ட மாணவர்களில் புதுச்சேரி முன்னணி யில் இருக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரி மாணவர்கள் இந்த வேலைவாய்ப்புத் திறன் சோதனையில் 60 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய அளவில் அதிகளவு வேலைவாய்ப்புத் திறன் கொண்ட மாணவர்கள் இருக்கும் மாநிலங்களில் முதல் ஐந்து இடத்தில் வட மாநிலங்கள் தான் உள்ளன. இதில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன. தொழில் வளர்ச்சி குறைவாக இருக்கும் மேற்கு வங்காளம்கூட தென்மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பது இன்னொரு ஆச்சர்யம்.
தென்மாநிலங்களிலும் ஆந்திரா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாகத்தான் நம் தமிழகம் வருவது இன்னொரு பெரிய அதிர்ச்சி.
எந்த மாநில மாணவர்கள் எந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புத் திறனை பெற்றிருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
மஹாராஷ்ட்ரா மாணவர்கள் வங்கி மற்றும் நிதிச் சேவையிலும், டெல்லி மாணவர்கள் சுற்றுலா மற்றும் மருத்துவத் துறையிலும், குஜராத் மாநில மாணவர்கள் பொறியியல் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும், தமிழ்நாட்டு மாணவர்கள் உற்பத்தித் துறையிலும் வேலைவாய்ப்புத் திறனை கூடுதலாக பெற்றிருக்கிறார்கள். பி.பி.ஓ மற்றும் ஐ.டி துறைகளில் கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில மாணவர்களும் முக்கியப் பங்காற்றுகிறார்கள். பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் கர்நாடகா மாணவர்கள் திறமையோடு இருக்கிறார்கள்.
உற்பத்தி துறையில் மாணவர்கள் கூடுதல் வேலைவாய்ப்புத் திறனை ஏன் பெற்றிருக்கிறார்கள், மற்ற துறைகளில் வேலை வாய்ப்புத்திறன் குறைந்திருக்கிறது? மேலும், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? என டீம் லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மூத்த துணைத் தலைவர் ரிதுபர்ண சக்ரபர்த்தியிடம் கேட்டோம்.
” உற்பத்தி நிறுவனங்கள் அமைவதற் கென சில காரணிகள் இருக்க வேண்டும். அதில் நிறுவனங்கள் அமைவதற்கென புறநகர் பகுதிகளில் இட வசதி, தண்ணீர் போன்றவை சாதமாக இருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த அறிவு, சிறப்பு சலுகைகள் (அரசு சார்பில் அளிக்கப்படும் மானியம், வட்டி சலுகைகள், மின்சார கட்டண சலுகைகள்) போன்ற மூன்று காரணிகள் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். இது தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் பல உற்பத்தி நிறுவனங்களை காண முடிகிறது. இதுபோன்ற சில காரணிகளால் தமிழ்நாடு உற்பத்தி துறையில் கூடுதல் வேலை வாய்ப்பையும், துறை சார்ந்த கூடுதல் வேலைத்திறனை பெற காரணி களாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அவுட்லுக்!
தமிழகத்தைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பில் உடனடி மாற்றம் ஏதும் இருக்காது. 2015-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை நன்றாக இருக்கலாம். மேலும், ஐ.டி துறை தமிழ்நாட்டுக்குள்ளேயே வளர்ச்சியடையலாம்”.
வேலைவாய்ப்புத் திறனில் வடமாநில மாணவர்களைவிட தென்மாநில மாணவர்கள் பின்தங்கி இருப்பது ஏன் என்கிற கேள்வியை சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனமான காம்ஃபை சொல்யூஷன் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே. சுகுமாரனிடம் கேட்டோம்.
”ஐ.டி துறையில் மட்டுமல்ல, கட்டுமானத் துறை, ஹாஸ்பிட்டல், சில்லறை மற்றும் மெக்கானிக்கல் என அனைத்து துறைகளிலும் வடமாநில ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகி உள்ளது. இதற்கு காரணம், சில வருடங்களுக்குமுன் அனைத்துத் துறைகளும் தமிழ்நாட்டில் ஏற்றம் அடைந்தன.
அப்போது ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவே, அதனை ஈடுகட்ட வடமாநிலத்தினர் அதிக அளவில் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்தத் தேவையை பயன்படுத்தி அங்குள்ள மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்துக்கொண்டனர். இந்தப் போக்குதான் இப்போதும் தொடர்கிறது.
அதேநேரத்தில், ஐ.டி துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலுள்ள முதல் 30 இடங் களிலுள்ள கல்லூரிகள் மற்றும் இந்தியாவிலுள்ள மற்ற முன்னணி கல்லூரிகளில் இருந்தும் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கின்றன” என்றவர், இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பற்றியும் சொன்னார்.
”கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகத் தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் ஐ.டி துறை சார்ந்த பாடப் பிரிவுகளில் மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு ஐ.டி துறையில் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு எனப் பல காரணங்கள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 33,505 இடங்களில் வெறும் 15,684 இடங்கள் மட்டுமே நிரம்பின. தற்போதுள்ள நிலையில், ஐ.டி துறையில் கல்லூரிப் படிப்பை முடித்து புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் இன்றளவும் கல்லூரிகளை முடித்து வெளியேவரும் மாணவர்களைத் தேர்வு செய்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழக மாணவர்களின் ஐ.டி துறை சார்ந்த இந்த ஆர்வக்குறைவால், பல நிறுவனங்கள் வடமாநில மாணவர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்றவர், மற்றொரு முக்கியமான காரணத்தையும் குறிப்பிட்டார்.
”பல நிறுவனங்கள் வடமாநில ஊழியர்களைத் தேர்தெடுக்க மொழியும் ஒரு காரணம். உதாரணத்துக்கு, ஐ.டி துறை சார்ந்த கால்சென்டர்களில் அவர்களுடைய தேவைக்கேற்ப, இந்தி மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகள் தெரிந்தவர்களை மட்டும் எடுக்கக்கூடிய சூழலில், அந்த மொழிகளை நன்கு தெரிந்தவர்களையே எடுக்கிறார்கள்.
பொதுவாக, எந்த நிறுவனமாக இருந்தாலும் வடமாநிலம், தென்மாநிலம் என்று பார்த்து வேலைக்கு எடுப்பதில்லை. திறமைக்கும் தகுதிக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த நிலையைப்போக்க தமிழக மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க கல்லூரிகளில் படிக்கும்போதே, மாணவர்கள் தங்களிடமுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களைப் புரிந்துகொண்டு, நிறுவனங்களின் தொழில்நுட்ப தேவைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவர்கள் எந்த மாற்றத்தையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் நல்லதொரு வேலைவாய்ப்பை பெற முடியும். இன்றைய நிலையில் உள்ள போட்டியை சமாளிக்க மாணவர்களுக்கு உள்ள சிறந்த வழி நிறுவனங்களுக்கு ஏற்ப தங்களது திறமையை வளர்த்துக்கொள்வதே” என்றார் சுகுமாறன்.
இன்றைக்கு வேலைவாய்ப்பு என்பது அடிப்படையான விஷயமாக மாறிவிட்டதால், வேலைவாய்ப்புக்கேற்ப தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதைத் தவிர, நமது இளைஞர்களுக்கு வேறுவழி இல்லை!