எனக்குள் ஒருவன். திரைவிமர்சனம்
சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.
இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இரவில் டீக்கடைக்கு செல்லும் சித்தார்த்திற்கு ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் ஜான் விஜய்யை அறிமுகம் செய்து வைக்கிறார். ஜான் விஜய் சித்தார்த்தின் தூக்கத்தை போக்க மருந்து ஒன்றை தருகிறார்.
‘அந்த மருந்தை சாப்பிட்டால் தூக்கத்தோடு கனவு வரும். அந்த கனவு நிஜத்தில் நீ எப்படி வாழ நினைக்கிறாயோ அதை காண்பிக்கும். விடிந்த பிறகு அந்த கனவு மறைந்து, பின்னர் மறுபடியும் தூங்கும் போது அந்த கனவு விட்ட இடத்தில் இருந்து தொடரும்’ என்று ஜான் விஜய், சித்தார்த்திடம் கூறுகிறார்.
மருந்தை சாப்பிட்ட சித்தார்த் கனவு உலகத்திற்கு செல்கிறார். பெரிய ஹீரோவாக மாறுகிறார். நிஜத்தில் பார்ப்பவர்கள் அனைவரும் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் கிடைக்காத விஷயங்கள் எல்லாம் சித்தார்த்திற்கு கனவில் கிடைக்கிறது. கனவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சித்தார்த், நிஜ உலகிற்கு திரும்பினாரா? கனவிலும் நிஜத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்பதை வித்தியாசமான கிளைமாக்ஸுடன் எடுத்திருக்கிறார்.
படத்தில் நாயகன் சித்தார்த் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தியேட்டரில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடிப்பு தீனி போட்டிருக்கிறார். இரண்டு கெட்-அப்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சித்தார்த்திற்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. நடிப்பால் இந்த படத்தில் மீண்டும் கைதட்டல் வாங்கியுள்ளார்.
நாயகியாக தீபா சன்னதி அழகாக வந்து அற்புதமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சிருஸ்டி துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். நொடிந்துப்போன தியேட்டர் அதிபராக வரும் ஆடுகளம் நரேன் நடிப்பால் மனதில் பதிகிறார்.
கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசியா படத்தின் தமிழ் பதிப்பாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர். படத்தில் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு தட்டாத அளவுக்கு காட்சிகளை கச்சிதமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையும் கிளைமாக்ஸ் திருப்புமுனையும் படத்திற்கு பெரும் பலம். நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் கருப்பு வெள்ளை படத்தை காண்பித்திருக்கிறார்கள்.
வழக்கம்போல் சந்தோஷ் நாராயணின் கலக்கலான இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. கருப்பு வெள்ளையிலும், கலர்ப்புல்லிலும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘எனக்குள் ஒருவன்’ சிறப்பானவன்.