இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக கடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான சாதனை செய்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்திய அணி, நேற்று ஆரம்பித்த 5வது டெஸ்ட் போட்டியிலும் தனது மோசமான ஆட்டத்தை தொடர்கிறது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களும், இரண்டு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகியுள்ளனர். கேப்டன் தோனி மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 82 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 13 ரன்களும், முரளி விஜய் 18 ரன்களும் எடுத்தனர். காம்பீர் 0, புஜாரா 4, விராத் கோஹ்லி 6, ரஹானே 0, பின்னி 5, புவனேஷ்குமார்5, ஆரோன்1, இஷாந்த் சர்மா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 61 ஓவர்களில் அனனத்து விக்கெட்டுக்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 19 ஓவர்கலில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. 86 ரன்களே பின் தங்கியுள்ள நிலையில் கைவசம் இன்னும் 10 விக்கெட்டுக்கள் இருப்பதால் இங்கிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.