இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 4வது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் ஆகஸ் 7ஆம் ஆரம்பமான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுசொதப்பலாக விளையாடியதால் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் தோனி இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய அணி 46.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கடந்த 1952ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணியின் ஆறு வீரர்கள் டக் அவுட் ஆகினர். பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 105.3 ஓவர்களீல் 367 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து வீரர் ரூட் 77 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நேற்று விளையாடத்தொடங்கிய இந்திய அணி, 43 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய வீரர்களில் அஸ்வின் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். அஸ்வின் 76 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களான எம்.எம்.அலி 4 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், ஜோர்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது. முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்திய பிரோட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.