‘எந்திரன் 2’ படத்தில் இருந்து விலக எமிஜாக்சனுக்கு 3 நாள் கெடு

‘எந்திரன் 2’ படத்தில் இருந்து விலக எமிஜாக்சனுக்கு 3 நாள் கெடு
amy jackson
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2.0 என்ற ‘எந்திரன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நாயகியாக எமிஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் பெண் ரோபோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து எமிஜாக்சனை மூன்று நாட்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழர் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என எமிஜாக்சன் உள்பட ஒருசில நடிகைகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கையெழுத்திட்டனர். தமிழ் படத்தில் நடித்து பணம் சம்பாதிக்கும் ஒரு நடிகை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி எமிஜாக்சனை உடனே ‘எந்திரன் 2’ படத்தில் இருந்து நீக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பு படக்குழுவினர்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி கூறியுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் சங்கருக்கும் தமிழர் முன்னேற்றப் படை 3 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் எந்திரன்-2 படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் திங்கட்கிழமை அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகைப் போராட்டம், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர் வீடு முற்றுகைப் போராட்டமாக மாறும்.

எந்திரன்-2 படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர் முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும். நடிகை எமிஜாக்சன் எந்திரன்-2 படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர், நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழர் அமைப்பு படையின் வேண்டுகோளின்படி எமிஜாக்சன் நீக்கப்படுவரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply