சொந்த வீடு கட்ட விரும்பும் பலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது பணத்தைத் திரட்டுவதுதான். அந்த நேரத்தில் பலருக்கும் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கைகொடுக்கும். இப்போது அந்தப் பணத்தை கொண்டே மலிவு விலை வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை ஈடுபட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கு வீடு என்ற இலக்கை அடையும் வகையில் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு.
இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் வைப்பு நிதி ரூ. 6.50 லட்சம் கோடியை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இபிஎஃப் சந்தாதாரர்களில் குறைந்தபட்சமாக வருவாய் பெறும் ஊழியர்கள் சுமார் 70 சதவீதம் உள்ளனர். இவர்கள் மாதம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள்.
இப்படிக் குறைவாகச் சம்பளம் வாங்கும் தொழிலாளர் களுக்குச் சொந்த வீடு என்பது பெரும் கனவாகவே இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் வாடகை வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள். இவர்களின் கனவை நனவாக்கும் வகையில் மலிவு விலை வீடு கட்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து ஜனவரி தொடக்கத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக நிபுணர் குழுவை அமைக்கவும் அப்போது திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் பொதுத் துறை வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், தேசிய கட்டிடக் கட்டுமான நிறுவனம், மாநிலங்களில் உள்ள ஊரக மேம்பாட்டுத் துறை, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி வாரியங்களுடன் இணைந்து செயல் படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இபிஎஃப் நிறுவனத்தில் உள்ள வைப்பு நிதியில் சுமார் 15 சதவீதத்தை மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என அண்மையில் குறிப்பு ஒன்றைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியது. இதன்மூலம் 15 சதவீத நிதியில் சுமார் 70 ஆயிரம் கோடி நிதியை இந்தத் திட்டத்துக்காகச் செலவிட முடியும். இந்தத் தொகையில் சுமார் 3.5 லட்சம் வீடுகள் கட்ட முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மலிவு விலை வீடு கட்டும் இந்தத் திட்டத்துக்கு இபிஎஃப் தொகையில் இருந்து இஎம்ஐ செலுத்துவதற்கும் இந்தத் திட்டத்தில் ஏற்பாடு செய்யவும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த யோசனையை தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக இபிஎஃப் சந்தாதாரர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாகச் சலுகை அளிக்கும் வகையில் திட்டத்தை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.