சுதந்திரத்திற்கு பின்னர் தொடங்கும் முதல் தனியார் வங்கி. 3 கிளைகளுடன் சென்னையில் தொடக்கம்.
சென்னையில் 3 கிளைகளுடன் எக்விடாஸ் சிறிய நிதி வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்படும் தனியார் வங்கி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.என். வாசுதேவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்ததையடுத்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் முதலாக மூன்று கிளைகளுடன் வங்கி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பிறகு தமிழ்நாட்டிலிருந்து உருவான முதல் தனியார் துறை வங்கி என்ற பெருமை கிடைத்துள்ளது. வங்கி சேவையை பொருத்தவரையில் பொதுத்துறை வங்கிகளுக்கும், சிறிய நிதி வங்கிகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. இரண்டு வங்கிகளும் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களில் மட்டுமே வேறுபடுகின்றன.
சிறிய நிதி வங்கிகள் முன்னுரிமை துறைக்கு 75 சதவீத கடன்களை தர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதேசமயம், பொதுத் துறை வங்கிகளில் இது 40 சதவீதமாக உள்ளது.
மேலும் சிறிய நிதி வங்கிகள் ரூ.25 லட்சம் வரையிலான கடன்களை 50 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுத் துறை வங்கிகள் ரூ.25 லட்சத்துக்கும் மேலான கடன்களை 50 சதவீதம் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
சிறிய அளவில் நிதி உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களை வசதியை கருத்தில் கொண்டே ரிசர்வ் வங்கி இத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது.
நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில் எக்விடாஸக்கு ஏற்கெனவே 26 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை வழங்குவதை முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
மேலும், எக்விடாஸ் ரூ.6,500 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. இதில், 50% நுண் கடனாகவும், 25 சதவீதம் பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களுக்கான நிதி உதவியாகவும், எஞ்சியுள்ள தொகை குறு சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் நாடு தழுவிய அளவில் 11 மாநிலங்களில் 410 சிறிய நிதி வங்கி கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதில், 50 சதவீதம் தென் மாநிலங்களிலும், 30 சதவீதம் மேற்கு மாநிலங்களிலும், 20 சதவீதம் வட மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 160 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், சிறிய நிதி வங்கி கிளைகளில் வர்த்தக பிரதிநிதிகளை நியமனம் செய்து வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கே தேடிச் சென்று வங்கி சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.