இலங்கை நாடாளுமன்றத்தில் 38 வருடங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவராகும் தமிழர்

இலங்கை நாடாளுமன்றத்தில் 38 வருடங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவராகும் தமிழர்

era sambandamஇலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக 38 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருக்க தனக்கு விருப்பம் இல்லை என சமீபத்தில் இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியதை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பின்னர் எந்த தமிழரும் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இரா.சம்பந்தன், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இலங்கை தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் (எஸ்எல்எப்பி) யுஎன்பியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்தக் கூட்டமைப்பு, தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்டதால், இதன் நாடாளுமன்ற குழு தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 225 இடங்களில் யுஎன்பி 106 இடங்களிலும் எஸ்எல்எப்பி கூட்டணி 95 இடங்களிலும் டிஎன்ஏ 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள இடங்களில் இதர கட்சிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply