தமிழகத்தில் மேலும் ஒரு கட்சி உதயம். சமத்துவ மக்கள் கழகம்
வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என்று அறிவித்துள்ளதால் கிட்டத்தட்ட ஆறு அணிகள் போட்டியிடும் நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதிமுக அணி, திமுக அணி, பாஜக அணி, மக்கள் நலக்கூட்டணி அணி, பாமக அணி மற்றும் தேமுதிக அணி என ஆறு அணிகள் இருக்கின்றது. இன்னும் தமாக உள்பட ஒருசில கட்சிகள் எந்த அணி என்பதையோ அல்லது தனி அணி என்பதையோ தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் போதாது என்று இன்னும் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சியில் இருந்து பிரிந்து வந்த எர்ணாவூர் நாராயணன் தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
அவர் தனது கட்சிக்கு ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்னும் பெயரை வைத்துள்ளார். நேற்று தனது கட்சியின் பெயரையும், அதற்கான கொடியையும் சென்னையில் அறிமுகம் செய்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை நாங்கள் ஆதரிப்போம். முதல்வர் வாய்ப்பளித்தால் நான் மீண்டும் போட்டியிடுவேன். சரத்குமார் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றே கருதுகிறேன். விஜயகாந்த் தனித்து நிற்பேன் என்று கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 20-ம் தேதி முதல் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன்’ என்று கூறியுள்ளார்.