ஈரோடு நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த பெரியாரின் தங்கைக்கு சொந்தமான தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது.
சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட பல போராட்டங்களை நடத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா ராமசாமி நாயக்கர். இவருடைய உடன்பிறந்த தங்கை கண்ணாம்மாள் என்பவருக்கு ஈரோட்டில் சொந்தமாக ஒரு தியேட்டர் இருந்தது. ஸ்டார் என்ற பெயரை கொண்ட இந்த தியேட்டரில்தான் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் முதல் பல திரைப்படங்கள் வெளியாகியது. ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம்தான் இந்த தியேட்டரில் மிக அதிகபட்சமாக 189 நாட்கள் ஓடியது.
இந்நிலையில் ரசிகர்களின் நவீன ரசனை மாற்றங்களால் பழமையான இந்த தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தொடர்ந்து சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த தியேட்டரை இடிக்க கண்ணம்மாளின் பேரன்கள் முடிவு செய்ததை அடுத்து தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திரையரங்கு உரிமையாளரில் ஒருவர் கூறுயதாவது, “10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈரோடு நகரில் 20 திரையரங்குகள் இருந்தன. இப்போது 10 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. ரசிகர்களின் ரசனை மாறி வருவதால் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
இங்கு மட்டுமல்ல சென்னை, சேலம், கோவை போன்ற நகரங்களில் கூட பழைமை யான திரையரங்குகள் இடிக்கப்பட்டுவிட்டன. எங்களது திரையரங்கை இடிக்க மனம் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் வேறுவழியில்லை’ என்று கூறினார்.