ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய ஈராக் பெண்ணுக்கு ஐ.நாவில் பதவி
உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்பினால் துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு ஐ.நாவின் நல்லெண்ண தூதர் பதவி கிடைத்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாதியா முராத் பஸீ தாஹா என்னும் 23 வயது ஈராக் நாட்டை சேர்ந்த பெண் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானார். அவருடன் 5,000-க்கும் மேற்பட்ட யஜீதி பழங்குடிப் பெண்கள் கடத்தப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி தற்போது ஜெர்மனியில் வசிக்கும் நாதியாவை ஐ.நா. அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
சமீபத்தில் சர்வதேச அமைதி தினத்தையொட்டி ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ல் அவர் நல்லெண்ணத் தூதராக முறைப்படி நியமனம் செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறியதாவது:
நாதியாவின் துன்பக் கதையைக் கேட்டு நான் அழுதுவிட்டேன். ஆனால் வருத்தத்தினால் வந்த அழுகை அல்ல அது. அவருடைய துணிச்சல், உறுதி, பண்பை எண்ணிக் கண்ணீர் வடித்தேன். யஜீதி இனத்தவருக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆள் கடத்தல், பாலியல் கொடுமைக்கு ஆளாவோருக்கு ஆதரவாக நாதியா குரல் எழுப்பி வருகிறார்.
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த அவர், துணிச்சலுடன் செயல்பட்டுத் தப்பித்தார். தான் அனுபவித்த துன்பங்கள் குறித்துப் பேசுவதுடன், தப்பிக்க வழியில்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் ஏராளமானோருக்கு நீதி கோரித் தொடர்ந்து போராடி வருகிறார் என்று பான் கி-மூன் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது: இராக்கில் யஜீதி பழங்குடியினத்தவர் வசிக்கும் சிஞ்சார் பகுதியைக் கடந்த 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித இனத்துக்கு எதிரான தாக்குதலாகவும் இனப் படுகொலையாகவும் கருத இடமுள்ளது. அந்த அப்பாவி மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார் பான் கி-மூன்.நாதியாவுக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று இராக் அரசு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது. நாதியா நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐ.நா. அமைப்பானது, குழந்தைகள் கடத்தல், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் நோக்கத்துடன் பெண்களைக் கடத்துதல், கொத்தடிமையாக்குதல், சிறுவர்களைப் போரில் ஈடுபடச் செய்தல், உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக ஆள் கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது.