இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சாக்சி மகராஜ் என்பவர் பேசியுள்ள பேச்சு காரணமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாக்சி மகராஜ் எம்.பி., இந்து மதத்தின் கொள்கைகள் பரப்பவும், இந்த மதத்தினர்களின் ஒற்றுமையைப் பலப்படுத்தவும் ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் முந்தைய காலத்தைப் போல ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி 40 குழந்தைகளை பெற்றுக்கொள்வது இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சு காரணமாக சாக்சி மகராஜ் பெரும் பிரச்சனையில் சிக்கி உள்ளார்.
இவர் ஏற்கெனவே பாராளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களுக்கும், மதம் மாறுபவர்களுக்கும் மரண தண்டனைக்கு சமமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசி பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருந்தார். அதேபோல மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொலை செய்த கோட்சேவை சிறந்த தேசபக்தர் என்று கூறிவிட்டு அதன் பின்னர் ஏற்பட்ட பெரும் சர்ச்சை காரணமாக மன்னிப்புக் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.