ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மோடி போல மெளனமாக இருப்பது ஏன்? ஜெ.க்கு இளங்கோவன் கேள்வி

EVKS speechமோடியை போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மெளனமாக ஜெயலலிதா இருந்து வருவது ஏன்? என சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் மேலும் கூறியதாவது:

தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதாவோ கட்சி நிர்வாகிகளோ எந்த பதிலும் சொல்லவில்லை. மின் வாரியத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா மவுனம் காத்து வருகிறார். மோடியைபோல் இவரும் மவுனமாக இருக்க முடிவு செய்து விட்டார் போலும். மவுனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே வாய் திறந்து பதில் சொல்லி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 47 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அதே சூழ்நிலை தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்த இயக்கம் பெருந்தலைவர் காமராஜரை தீர்த்துக்கட்ட முற்பட்டதோ இதே இயக்கம் அமித்ஷாவை அழைத்து காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது விசித்திரமாக உள்ளது. காமராஜருக்கு விழா எடுக்க அந்த கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செயல்படுகிறார்கள். அந்த எண்ணம் ஈடேறாது. ‘கத்தியை எடுப்போம், காமராஜரை காப்போம்’ என்று பெரியார் சொன்னதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். பல்வேறு ஊழல் புகார்கள் குறித்து கவர்னர் ரோசையாவிடம் மனு கொடுத்தோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் பல கவர்னர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தமிழக கவர்னர் ரோசையா மாற்றப்படவில்லை. காரணம் ரோசையா மேலும், கீழும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊழல்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துவோம்.

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா அ.தி.மு.க. செயலாளர் போல் செயல்படுகிறார். அ.தி.மு.க.வுக்கு எதிராக யார் யாரெல்லாம் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறதோ அவர்களின் பெயர்கள் தேர்தல் அதிகாரி துணையுடன் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்படுகின்றனர்.

கூட்டணியை பொறுத்தவரை எந்த கூட்டணியில் இடம் பெறுவது? எப்படி செயல்படுவது என்பதை எல்லாம் தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 23ந்தேதி திருச்சி வருகிறார். அப்போது விவசாயிகளை சந்தித்து குறை கேட்கிறார். மாலை 4 மணிக்கு நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, அகில இந்திய செயலாளர் ஜெயக்குமார், கோபண்ணா, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வ பெருந்தகை, மத்திய சென்னை கோட்ட தலைவர் ரங்கபாஷ்யம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply