பிரேமலதாவுக்கு பதில் சொல்ல தேவையில்லை. எங்களுக்கு விஜயகாந்த் தான் முக்கியம். இளங்கோவன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் வரவுள்ள நிலையில் சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதியானது. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த கூட்டணி குறித்து கருத்து கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி ஊழலில் ஊறிய கூட்டணி என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையாது என்பது உறுதியாகின்றது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனம் குறித்து கருத்து கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ‘பிரேமலதா விஜயகாந்தின் கருத்துக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரையில் விஜயகாந்த் என்ன சொல்கிறாரோ அது தான் முக்கியமே தவிர, அந்த கட்சியில் உள்ள மற்றவர்கள் சொல்வது முக்கியமில்லை’ என்று கூறினார்.
மேலும் அவர் வைகோ குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘வைகோவை பொறுத்தவரை ஜெயலலிதாவிற்கு ஜல்ரா அடிப்பது என்று முடிவு செய்து செயல்படுகிறார்’ என்று கூறினார்.
இந்நிலையில் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியை நோக்கி செல்வதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.