தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? இளங்கோவன் அதிர்ச்சி
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் விஜயதாரிணி, வசந்த்குமார் போன்றவர்கள் தங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையே அவரை காங்கிரஸ் மேலிடம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி என பலரும் இளங்கோவனை மாற்ற வேண்டும் என மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற இளங்கோவன், கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். ஆனால் அவருடைய விளக்கத்தை ஏற்காத ராகுல், இளங்கோவனிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் இதன் காரணமாக ராகுல்காந்தி வெளிநாட்டு பயணம் முடிந்து திரும்பியவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்துவதை போல் சோனியா காந்தியை சந்திப்பதற்காக 3 நாட்கள் இளங்கோவன் டெல்லியில் காத்திருந்தார். ஆனால் இளங்கோவனை சந்திக்க சோனியா காந்தி மறுத்துவிட்டதாகவும் இதனால் ஏமாற்றத்துடன் இளங்கோவன் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.