இளங்கோவன் கைது எப்போது? பரபரப்பாகும் தமிழக அரசியல்
பிரதமர்-முதல்வர் சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிந்த வளர்மதி என்பவர் கொடுத்த புகாருக்கு சென்னை நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
தன்மீது கொடுக்கப்பட்ட புகாரின் வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த இளங்கோவனின் மனுவை அவசர மனுவாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.
இதனால் இளங்கோவன் தரப்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையிடப்பட்டதை அடுத்து இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை பதிலளிக்க கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இளங்கோவன் கைது எந்நேரமும் நடக்கலாம் என கூறப்படுகிறத்.
காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள கடைகளின் வாடகையை வளர்மதியும் , மேலாளர் நாராயணனும் சேர்ந்துதான் வசூலித்துள்ளனர். அதில் 35 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் ஒரு நபர் அந்த கடைகளுக்கு பெயர் மாற்றம் கேட்டுள்ளதாகவும், இதற்கு ஒரு கடைக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3 கோடி பணத்தை அந்த நபரிடம் வாங்கும்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நாராயணனும் வளர்மதியை வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தான் மிரட்டப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறி வளர்மதி உயிருக்குப் பாதுகாப்புக் கேட்டு போலீசாரிடம் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து இளங்கோவன் மற்றும் நாராயணன் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.