நாடாளுமன்றத்தை முடக்குவது எப்படி என்பதை பாஜகவிடம்தான் கற்றுக்கொண்டோம். ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மதுவை எதிர்த்து போராடி வரும் நிலையில் ஈரோட்டில் தனது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது:
நாடாளுமன்றத்தை முடக்குவது எப்படி என்பதை பாஜகவிடம் இருந்து தான் காங்கிரஸ் கற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மதுவிலக்கு வேண்டுமென்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம். எப்படி அமல்படுத்துவது என்பதில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கருத்து உள்ளது.
பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். பாஜக- அதிமுக இடையே ரகசிய உறவு உள்ளது என்று ஏற்கெனவே நான் பலமுறை தெரிவித்துள்ளேன். நில சீர்திருத்த சட்டத்துக்கு அதிமுக ஆதரவு தருகிறது என்பது போன்ற நடவடிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுவது உறுதி. அந்த கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக வைகோ இருந்து வருகிறார். எங்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் மட்டுமல்ல எந்த தீவிரவாதத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
தமிழக காய்கறிகள் கேரளத்தில் சோதனைக்கு பின் அனுமதிப்பது என்பது தவறானது. இது தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசுவேன்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்களை நீக்கியுள்ளேன். அவர்களை தூண்டி விடுகிற பெரிய மனிதர் யார் என்று எனக்கு தெரியும். அந்த பெரிய மனிதரை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். அவர் மீது விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும்
இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.