சிறுவர்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கார்த்திக் சிதம்பரம் குறித்து இளங்கோவன்
பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து அதன்பின்னர் பலரது கண்டனங்களை பெற்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார். மேலும் காங்கிரஸ் அலுவலக ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பான நிலையில் முதல்வர் ஜெயலலிதா இந்த பிரச்சனையில் தலையிட்டு இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாமென்று கோரிக்கை விடுத்து, அதிமுகவினரின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து இளங்கோவன் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு பெண் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை இளங்கோவன் சந்தித்தார். பிரதமர் -முதல்வர் சந்திப்பு குறித்து இளங்கோவன் வரம்பு மீறி பேசியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் ”சிறுவர்களுக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
இளங்கோவன் சத்தியமூர்த்தி பவன் வருவதையடுத்து இன்று காலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். வளர்மதி கொடுத்த புகாரில் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.