தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா அவர்களுக்கு காங்கிரஸில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சஞ்சய், ராம் என்ற இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் ராம் தனது பெயரை திருமகன் ஈவெரா என சமீபத்தில் மாற்றிக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னர் திருமகன் ஈவெரா, அடிக்கடி சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து கட்சியின் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய கட்சி ஆர்வத்தை பார்த்து தற்போது அவருக்கு கட்சியின் சமூக ஊடகத்துறை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், எம். கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் ஆகியோர்களின் வரிசையில் தற்போது இன்னொரு காங்கிரஸ் தலைவரின் வாரிசும் காங்கிரஸில் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழக காங்கிரஸ் ஊடகத் துறையின் தலைவராக ஆ.கோபண்ணா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஊடகத் துறை பொறுப்பாளராக இருந்து, தேசிய முரசு என்ற இதழை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கை நாராயணன், எஸ்.ஜோதிமணி, எஸ்.விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, உ.பலராமன், எம்.ஜோதி, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம்.இதாயத்துல்லா, கே.பாலசுப்பிரமணியன், எர்ணாஸ்ட் பால், ஆர்.சுதா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என இளங்கோவன் அறிவித்துள்ளார்.