எங்களுக்கும் வன்முறையில் ஈடுபடத் தெரியும். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி
பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று விடுத்துள்ள விளக்க அறிக்கை ஒன்றில், ”பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் அனைவரும், சென்னை வரும்போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழக பா.ஜ.க.வோ அ.தி.மு.க.வை எதிர்ப்பது போல் நடந்து கொள்கிறது. இதைத்தான் நான் கூறினேன். இதில் என்ன அவதூறு இருக்கிறது என எனக்கு புரியவில்லை. எனவே, நான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
நான் கூறிய கருத்தில் தவறு இருப்பதாக நினைத்தால் ஜனநாயக ரீதியில் எதிர்க்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வன்முறை செய்தால் எங்களுக்கும் வன்முறையில் ஈடுபடத் தெரியும்.
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் மதுவிலக்கு போராட்டங்களை திசைதிருப்பவே அ.தி.மு.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி அளித்தால், எனது விமர்சனத்தை திரும்பப் பெறுகிறேன்” எனக் கூறியுள்ளார்.