ஜெயகுமார் தவிர அதிமுகவினர் அனைவரும் தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளனர். நாஞ்சில் சம்பத்

ஜெயகுமார் தவிர அதிமுகவினர் அனைவரும் தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளனர். நாஞ்சில் சம்பத்

திகார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை திரும்பிய டிடிவி தினகரன், திடீரென தனி அணியாக செயல்பட்டதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது அணியில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தாலும், முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து இருக்காது என்றே கருதப்படுகிறது. ஆட்சியை கவிழ்த்தால் தற்போதுள்ள சூழ்நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது மூன்று அணிகளுக்கும் தெரியும் என்பதால் மீதியுள்ள நான்கு வருட ஆட்சிக்க்கு மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கவிழும் ஆபத்து உள்ளது.

இந்த நிலையில் நிதியமைச்சர் ஜெயகுமார் தவிர முதலமைச்சர் உள்பட அனைவரும் தினகரன் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

அதிமுகவுக்கு தலைமை தாங்கும் ஆற்றலும், ஆளுமையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் தினகரனிடம் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துதான் எம்பி., எம்எல்ஏ.க்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தினகரன் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என அவரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் மட்டும்தான் அவருக்கு எதிராக பேசி வருகிறார். அமைச்சர்கள் சார்பாக பேசுவதாகக் கூறி தன்னை தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறார். ஜெயக்குமார் நன்றி மறந்து பேசி வருகிறார். அவரைத் தவிர மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் தினகரன் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.

தேர்தலை சந்திக்க எந்தவொரு எம்எல்ஏ.வும் விரும்ப மாட்டார். எனவே, 2 மாதத்தில் தேர்தல் வரும் என்ற மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனின் கனவும், எப்படியாவது முதல்வராகிவிடலாம் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவும் நனவாகாது.

இரட்டை இலை சின்னத்தை மீட்டு சீனப்பெருஞ்சுவர் போல அதிமுகவை தினகரன் கட்டிக்காப்பார். அதிமுக இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை. தினகரனை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்

Leave a Reply