43 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய சிலி எரிமலை.

volcano43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ என்ற எரிமலை நேற்று திடீரென மீண்டும் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே சாம்பல் மயமாகியுள்ளது. மேலும் அந்த எரிமலை சாம்பல் மற்றும் புகையை அதிகளவு வெளிப்படுத்தி வருவதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.  எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 2 லட்சம் பேர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர்.

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்ட் அருகே உள்ள கால்புகோ என்ற எரிமலை கடைசியாக கடந்த 1972ஆம் ஆண்டு வெடித்து சிதறியது. அதன்பின்னர் சரியாக 43 ஆண்டுகள் கழித்து நேற்று முதல் கடும்  சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் எரிமலையை சுற்றி உள்ள 20 கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் அந்நாட்டு மீட்புப்படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதால் பொதுமக்களை மேடான பகுதிக்கு மீட்புப்பணியினர் மாற்றி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காவல்துறையினருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply