மிக முக்கியமான பிரச்சினை கண் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. பெரியவர்களுக்கு சாதரணமாக சுற்றுப்புறத் தூசியின் காரணமாக வரும்.. கண் பாதுகாப்புக்கான கண்ணாடி அணிந்தாலே குறைந்து விடும்.
குழந்தைகளுக்குச் சற்றுக் கடுமையாக இருக்கும். வருடக்கணக்கில் குழந்தைகள் அலர்ஜியால் அவதியுறுவர். ஆண் குழந்தைகளுக்கு அதிகமாகக் காணப்படும். ஒரு வயதில் கூட ஆரம்பித்து விடும். சாதாரணமாக பதினாலு, பதினைந்து வயது வரை இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்கள், பழுப்பு, அழுக்கு நிறமாக இருக்கும். கண்ணைக் கசக்கிக் கொண்டே இருப்பார்கள். சில பருவ காலங்களில் அதிகமாக இருக்கும். இதை, vernal conjunctivitis அல்லது spring catarrh என்போம்.
பூக்களின் மகரந்தத்திலிருந்தும், தூசியிலிருந்தும் இந்த அலர்ஜி அதிகமாகப் பரவுகிறது. அலர்ஜி என்று வந்து விட்டாலே, ஒரு முறை மருந்து போட்டு குணமாகி விடாது. திரும்பத் திரும்ப ஒவ்வாத பொருளைத் தொடவோ, நுகரவோ நேரும் போது, மறுபடி வரும். கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1.மருத்துவரின் சீட்டுகளை, தொகுத்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இது தொடர்கதையாக இருப்பதால்..
2. உபயோகிக்கும் மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு. ஆகவே, என்னென்ன மருந்துகள், எவ்வளவு உபயோகித்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மருத்துவர் அநுமதியின்றி, பழைய சீட்டை வைத்துத், திரும்பத் திரும்ப மருந்தை வாங்கிப் போடுவது ஆபத்தானது.
3.கண்ணாடி பவர் இருந்தால், தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டும். சமயத்தில், பவர் இல்லாவிடினும் கூட, அலர்ஜியிலிருந்து பாதுகாப்பதற்காகவே, கண்ணாடி அணியச் சொல்வோம்.
4. கண்களை கசக்கக் கூடாது. அரிக்கும் போது, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் கண்களை ஒத்திக் கொள்ளலாம். அதிகமாகக் கசக்குவது பெரும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மிக அதிகமாகக் கசக்குவதால் சிலருக்கு, கருவிழியின் வடிவமே மாறிப்போய், கூம்பு போல் ஆகி, [KERATOCONUS] நிரந்தரப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.
தொற்று மற்றும் ஒவ்வாமை தவிர, கண் சிவப்பாக இருப்பதற்கான வேறு காரணங்களும் இருக்கின்றன. இவை புண் எனக் கூறப்படும் inflammatory disorders. யுவியைடிஸ், ஸ்கிளீரைடிஸ்[uveitis, scleritis] போன்றவை ஏற்படும் போது, இவை உருவாக உடலில் வேறு காரணங்கள் உள்ளனவா என்று பல பரிசோதனைகள் செய்து பார்ப்போம்.. Tuberculosis எனப்படும் காசநோயைக் கூட, கண்களில் ஏற்படும் புண் சமயத்தில் காட்டிக் கொடுக்கும்.
அதே போன்று, கண் கட்டிகள், திடீர் வீக்கத்தையும், வலியையும் சிவப்பையும் ஏற்படுத்தும்.. முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது கண்கட்டிகள் ஏற்படுவதற்கான முதற் காரணம்.
கம்பளி போர்வையும், விரிப்புகளும் உபயோகிப்பதாலும் கண்கட்டி சிலருக்கு வரலாம். கண்கட்டி அடிக்கடி வந்தால், சர்க்கரை நோய் உள்ளதா என்பதையும், கண் பவர் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ணில் சுருக்கென்ற வலியுடன், லேசான வீக்கத்துடன் கண்கட்டி ஆரம்பிக்கும் போதே, சுத்தமான் துணியை, வெந்நீரில் நனைத்து , கண்ணை மூடிக்கொண்டு, அந்த கட்டியின் மேல் ஒத்தடம் கொடுத்தால், உடனே குறைந்து, மறைந்து விடும்.
ஆகவே, கண்வலி போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்க, பொது இடங்களில் இருக்கும் போது, கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
கண்கள் சிவப்பானாலே கண்வலி என்று முடிவு செய்து, நீங்களாக மருந்தை வாங்கிப் போட்டுக் கொண்டேயிருக்கக் கூடாது. தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.