‘வெள்ளையனே வெளியேறு’ போல் ‘பாஜகவே வெளியேறு’ இயக்கம்: மம்தா பானர்ஜி
இந்தியாவை ஆட்சி செய்து வந்த கொடுங்கோல் ஆட்சியான வெள்ளையனை வெளியேற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடந்ததை போல் பாஜகவை இந்தியாவில் இருந்து துரத்தியடிக்க ‘பாஜகவே வெளியேறு’ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2019ஆம் ஆண்டு பாஜகவை துரத்தியடிப்பதே இந்த இயக்கத்தின் திட்டம் என்றும் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது: பாஜக-வை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் ஜனநாயகம் இறுதியில் வெல்லும்.
அவர்கள் எங்களை அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவற்றை வைத்து அச்சுறுத்தலாம். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. மத்திய அரசு இத்தகைய முகமைகளால், முகமைகளுக்காக நடத்தப்படும் அரசாக உள்ளது.
ஒரு புறம் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களையும், ஆதிவாசிகளையும் நசுக்குகிறது, கொல்கிறது மறுபுறம் அவர்களுடன் புகைப்படம் அவர்களுடன் அவர்கள் வீட்டில் மதிய உணவு அருந்துகிறது. ஆதிவாசிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறது பாஜக” என்று கூறினார்.