கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.
மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும். இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.
கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.
அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.
மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.
எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும். இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.
இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.