பாகிஸ்தானுக்கு F-16 ரக போர்விமானங்களை விற்க வேண்டாம். அமெரிக்க செனட் உறுப்பினர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான F-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. ஆனால் இந்த போர் விமானங்களை பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு F-16 ரக போர்விமானங்களை விற்கும் அமெரிக்காவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய செனட் உறுப்பினர் மேட் சால்மன், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் F-16 ரக போர்விமானங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்தும். பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது போல தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் F-16 ரக போர்விமானங்களை அந்நாடு பயன்படுத்தாது.
மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏராளமான நிதியுதவி அளித்து வந்தாலும், அங்கு தீவிரவாதிகள் சுதந்தரமாக வாழ்ந்து வருகிறது. எனவே பாகிஸ்தானுக்கு F-16 ரக போர்விமானங்களை விற்க வேண்டாம் என்று செனட் உறுப்பினர் மேட் சால்மன் கூறியுள்ளார். மேலும் பெரும்பாலான செனட் உறுப்பினர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளதால் அமெரிக்க அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது.