தேமுதிக எம்.எல்.ஏவை காணவில்லை. ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த பொதுமக்கள்
பிரபல நடிகர், தயாரிப்பாளர், விஜயகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் மற்றும் பேராவூரணி தொகுதியின் தேமுதிக கட்சியின் எம்.எல்.ஏவுமான அருண்பாண்டியன் திடீரென காணவில்லை என ஃபேஸ்புக்கில் விளம்பரம் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, “இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பேராவூரணியில் வீடு எடுத்து தங்கியிருந்து, மக்கள் பணி ஆற்றுவேன்” என்று வாக்கு கொடுத்த அருண்பாண்டியன், எம்எல்ஏ-வான ஒரு சில நாட்களில் தேமுதிகவில் இருந்து அதிமுக ஆதரவாளராக மாறினார். மேலும் தன்னை எம்.எல்.ஆக தேர்ந்தெடுத்த பேராவூரணி தொகுதி மக்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் எந்த நன்மையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்துவருகிறது.
“இந்த 4 ஆண்டுகளில் அருண்பாண்டியன் அதிகபட்சமாக ஏழெட்டு முறை மட்டுமே தொகுதி பக்கம் தலைகாட்டி இருப்பார் என்றும் தொகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து அவர் கண்டுகொள்வது இல்லை என்றும் அந்த தொகுதி மக்கள் பொருமுகின்றனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு என்ற விளம்பரம் ஒன்றில் “தொகுதி எம்எல்ஏ அருண்பாண்டியனை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 பரிசு” என கிண்டலடித்து வெளியிட்ட பதிவு, இப்பகுதி மக்களிடமும், இங்கிருந்து வெளிநாடுகள் சென்று வசிப்பவரிகளிடமும் காட்டுத் தீயாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பின்னராவது தொகுதிக்கு வந்து மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அருண்பாண்டியன் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.