பேஸ்புக் தகவல்கள் கசிந்த விவகாரம்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மார்க் ஆஜராக உத்தரவு
உலகின் நம்பர் ஒன் மூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்க் வரும் 11ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேற்கண்ட தகவலை இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க பாராளுமன்ற விசாரணை குழுவினர், ’இணையதளங்களில் பதிவிடப்படும் தங்களைப்பற்றிய தகவல்கள் என்னவாகின்றன? என்னும் தகவல் பாதுகாப்பு அம்சம் தொடர்பாக அமெரிக்க மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த விசாரணை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த விசாரணையில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பர்க்-ம் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.