மயில்கள் உடலுறவு கொள்ளாதா? நீதிபதியின் சர்ச்சை பேச்சு

மயில்கள் உடலுறவு கொள்ளாதா? நீதிபதியின் சர்ச்சை பேச்சு

நாடெங்கிலும் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பசுக்களை வெட்டுபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியவர் ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா. இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் “மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.” என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வரும் நிலையில் மயிலை பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துவரும் கோவை சதாசிவம் என்பவர் இதுகுறித்து கூறியதாவது:

நீதிபதி சர்மாவின் பேச்சு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. சட்டம் படித்த ஒரு மனிதர் இப்படியெல்லாம் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர் சொல்லும் கண்ணீர்க் கதையில் கடுகளவும் உண்மையில்லை. கண்ணீரில் உயிரணுக்கள் எப்படி இருக்கமுடியும்? கோழி இனத்தைச் சேர்ந்த பெரிய பறவைதான் மயில். கோழி எதையெல்லாம் உண்ணுகிறதோ அதையெல்லாம் மயில்களும் உண்ணும். சேவல் கோழி, பெட்டைக்கோழிமீது ஏறி மிதித்து இனப்பெருக்கம் செய்வது போலத்தான் ஆண் மயில் தோகை விரித்து ஆடி பெண்மயிலைக் கவர்ந்து இழுத்து அருகில் வர வைத்து பெண்மயில்மீதி ஏறி உடலுறவு கொள்ளும். இது பல முறை நான் நேரில் பார்த்த நிகழ்வு.

பெண்மயில்கள் ஒரு தடவையில் அதிக பட்சம் 9 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை, கரடுமுரடான புதர்ப் பகுதியில் மண்ணைக்கிளறிப் போட்டுவைத்து கோழிகள் செய்வது போலவே அடைகாக்கும். இதுதான் நிதர்சனம். கண்ணீரைக்குடித்து கர்ப்பம் தரிக்கின்றன மயில்கள் என்பது வெறும் கேலிக்கூத்து” என்றார் சதாசிவம்.

Leave a Reply