இழப்பை தரும் இலக்கு தவறிய முதலீடுகள்

investmentவேலையை முழுவதுமாக முடிக்காமல் பாதியிலேயே விடுவது யாருக்குமே பிடிக்காது. அடுத்தவர்கள் செய்தால் உடனடி யாக அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவோம். ஆனால் அந்த தவறை நாமே செய்தால், அடுத்த முறை சரிசெய்துவிடுவோம் என அமைதியடைகிறோம். திரும்ப திரும்ப ஒரு தவறை, நமக்கு தெரியாமல் நாமே அந்த வேலைகளை அரைகுறையாக செய்து கொண்டிருக்கிறோம் என்றால் நம்புவீர்களா…

ஆம் நமது பொருளா தார திட்டமிடல்கள் பலவற்றை அரைகுறையாகத்தான் செய்து வருகிறோம் என்பதுதான் உண்மை. இப்படி அரைகுறை திட்டமிடுதல்கள் குறித்து கவலைப்படுவதும் இல்லை. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து யோசிப்பதில்லை. அப்படி எந்த எந்த வகைகளில் நமது அரைகுறை வேலைகள் இழப்பை கொண்டு வருகின்றன என்பதை சில ஆலோசகர்கள் எடுத்துக் கூறினர். ஒரு காப்பீடு இந்தியாவில் எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை, பாதியிலேயே காலா வதியாகிவிடுகின்றன என்கிறார்கள். இரண்டு மூன்று பிரீமியம் மட்டும் செலுத்திவிட்டு, அதைத் தொடராமல் விட்டுவிடுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

2011-12-ல் மட்டும் கிட்டத்தட்ட 1.9 லட்சம் கோடி ரூபாய் கவரேஜ் தொகை கொண்ட பாலிசிகள் காலாவதியாகியுள்ளன. பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மட்டும் சுமார் 51 சதவீத டிரெடிஷனல் பாலிசிகள் புதுப்பிக்கப்படவில்லை. ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ரிலையன்ஸ், பார்தி ஆக்ஸா போன்ற நிறுவனங்களிலும் முறையே 42, 38, 36 சதவீத பாலிசிகள் புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்கின்றன புள்ளிவிவரங்கள். இதற்கு என்ன காரணம் என பல இன்ஷூரன்ஸ் ஆலோசகர்களிடம் கேட்டோம். நம்மவர்களுக்கு இன்ஷூரன்ஸ் குறித்த சரியான புரிதல் கிடையாது.

இன்றைக்கு பணம் கட்டிவிட்டு, நாளைக்கே அதிலிருந்து பலன் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாக பார்க்கின்றனர். இன்னொரு புறம் வருமான வரிச் சலுகைக்காக பாலிசி எடுக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு போக்குகளுமே தவறு. நமக்கு பிறகு நமது குடும்பத்தின் பாதுகாப்புக்கான திட்டமிடல் என்கிற எண்ணத்திலிருந்து இதை அணுகினால் காப்பீடு பாலிசியை தொடர்ந்து கட்டி வருவோம். வங்கிக் கணக்கு வங்கிக் கணக்கு விஷயத்திலும் பல அசாதாரண நிலைமைகளை சந்தித்த அனுபவம் பலருக்கும் உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பராமரித்து வருபவர்கள் இந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்கின்றனர் வங்கியாளர்கள்.

வெளியூரி லிருந்து மாற்றலாகி வருபவர்கள், வந்த இடத்திலும் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குகிறார்கள். அதே சமயத்தில் பழைய வங்கிக் கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு, அந்த கணக்கு எண்ணை பயன்படுத்த வேண்டிய சூழலில் பரிவர்த்தனை செய்து பண இழப்புகளை சந்திப்பார்கள். குறைந்தபட்ச பராமரிப்பு தொகை வைக்காத கணக்குகளில் அதற்கான அபராத கட்டணம் பிடிக்கப்படும், மேலும் ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படும். இதையெல்லாம் கணக்கிட்டு அந்த கணக்கையும் தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும்.

அல்லது வங்கிக் கணக்கு தேவையில்லை என்றால் முறைப்படி முடித்து விட வேண்டும். ஆர்பிஐ இப்படியான கட்டணங்கள் பெறுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்கினாலும், தனியார்துறை வங்கிகள் இந்த கட்டணங்களை பிடித்தம் செய்கின்றன. கிரெடிட் கார்டுக்கான பணம் கட்டவில்லை என்றால், அதனோடு இணைந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் மறந்துவிட வேண்டியதுதான். எனவே எந்த சூழலிலும் வங்கிக் கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். பரிமாற்றம் இல்லாத கணக்கை பராமரித்து வருவது வங்கியாளர் களுக்கும் சுமையான விஷயம்தான். டீமேட் கணக்கு பங்குச் சந்தை வர்த்தக செயல் பாடுகள் மற்றும் கடன் பத்திர முதலீடுகள் போன்றவற்றுக்கு டீமேட் கணக்கு அவசியம்.

இதிலும் பாதி திட்ட மிடுதல்களே தொடர்கிறது என்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். டீமேட் என்பது நமது பங்குகளை வாங்கி வைப்பது. வங்கிக் கணக்கு மூலம்தான் டீமேட் தொடங்குகிறோம். ஆனால் இதையும் முறையாக பராமரிப்பதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட டீமேட் கணக்குகள் வைத்துக் கொள்ள அனுமதி இருப்பதால், பலரும் பல டீமேட் கணக்குகளை தொடங்குகிறார்கள். பங்கு வர்த்தகத்திலோ அல்லது வேறு முதலீடுகளில் ஈடுபடவோ ஒரு டீமேட் கணக்கே போதுமானது. ஒரு கணக்கு தொடங்க குறைந்தபட்சம் ரூ.300 செலவாகிறது.

ஒவ்வொரு கணக்கிற்கும் பணம் கட்டு தொடங்குவது பொருளாதார இழப்புதான். நமது முதலீட்டு நோக்கம் நிறைவேற வேண்டுமே தவிர எத்தனை கணக்கு வைத்துள்ளோம் என்பதல்ல. எனவே டீமேட் கணக்கை தொடங்குவதிலும் பராமரிப்பதிலும் உரிய அணுகுமுறை தேவை. சிலர் டீமேட் கணக்கு வைத்திருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு நிறுவனத்தின் 10 பங்குகளை மட்டுமே வைத்திருப்பார்கள்.

இந்த பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை விட அந்த கணக்கினை பராமரிப்பதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். நமக்கு டீமேட் தேவையா என்பதை முடிவு செய்யுங்கள். இல்லையெனில் பராமரிப்பு கட்டணத்தை உங்கள் பாக்கெட்டுகளில் இருந்துதான் செலவழிக்க வேண்டும். மியூச்சுவல் பண்ட் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் மாதாந்திர முறையில் எளிதான முதலீட்டு வாய்ப்பை வழங்கும் எஸ்ஐபி திட்டங்களில் பணம் கட்டி வருபவர்கள் சில நேரங்களில் அதை தொடரு வதில்லை.

ஏதாவது ஒரு மாதத்தில் கட்டத் தவறும் நிலையில் அதை அப்படியே விட்டு விடுகின்றனர். இதுவும் தவறான அணுகுமுறை. நமது திட்டமிட்ட செலவுகளைப் போல இதை பராமரிக்க வேண்டும். மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மாதந்திர முதலீடு என்பது சுலபமாக செய்யக்கூடியது. எளிதாக பணமாக மாற்றும் வாய்ப்பு உள்ளதால், உடனடி பணத் தேவைக்கு இதைத்தான் யோசிக்கின்றனர். மியூச் சுவல் பண்ட் முதலீட்டை அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றாலும் கடைசி வாய்ப்பாகத்தான் இதில் கைவைக்க வேண்டும். நீண்ட காலத்தில் பலனளிப்பதுதான் முழுமை யான முதலீடு என்பதை புரிந்துகொள் ளுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடும் வேலைகள் பாதி முடிந்ததற்கு சமம் என்பார்கள், அப்படி திட்டமிட்டு தொடங்கி பாதியில் நிறுத்தும் வேலைகளால் நமக்கு பயன் கிடைக்காது என்பது அனுபவ உண்மை. தவிர இதனால் ஏற்படும் பண இழப்புகளும் அதிகம். பொதுவாக முதலீட்டு திட்டங்கள் முழுமையடைந்தால்தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் சொல்லும் பாடம். முழுமை பெறாத திட்டங்களால் இழப்பு களே என்பதை புரிந்து கொண்டால் இலக் குகளை நோக்கி முன்னேறுவோம்!

Leave a Reply