கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கூட்டத்திலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நரசிபுரம் என்ற பகுதியில் மரம் வளர்த்து மழை பெறுவது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற சினபோகிலி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற விவசாயி அரசுக்கு எதிராக திடீரென கோஷமிட்டபடி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை தற்போது அபாய கடத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி ராமு தெலுங்கு தேச தொண்டர் என்றும் இவருக்கு 1.20 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது என்றும் இந்த நிலத்தில் அவர் விவசாய கடன் பெற்று நெல் பயிரிட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் பெரும் நஷ்டம் அடைந்த இவர் விவசாய கடன் தள்ளுபடி ஆகும் எதிர்பார்த்ததாகவும், ஆனால் கடன் தள்ளுபடி ஆகாததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது தற்கொலைக்கான காரணத்தை ராமு கடிதம் ஒன்றில் எழுதி வைத்து இருந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் மறைப்பதாகவும், ராமுவின் உறவினர்களும், எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டி உள்ளன.
சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.