நிலம் கையக மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலம் கையக மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் புதன்கிழமை நடத்திய இந்தப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சிங் சிங் பேசினார். அப்போது, கூட்டத்தில் பார்வையாளராக வந்த கஜேந்திர சிங் அருகே இருந்த மரத்தில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் பொதுக்கூட்டத்தைப் பார்வையிடுவதற்காக ஆர்வத்தில் மரத்தில் ஏறுகிறார் என அருகே இருந்தவர்கள் கருதினர்.
ஆனால், அவர் வைத்திருந்த துண்டை மரத்தில் கட்டி திடீரென தூக்கிட்டுத் தொங்கினார். இதைப் பார்த்த கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் மரத்தில் ஏறி கஜேந்திர சிங்கை இறக்கி அருகே உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கஜேந்திர சிங்கின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
கடிதம் சிக்கியது: இதற்கிடையே, சம்பவப் பகுதியில் தில்லி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கஜேந்திர சிங்கின் உடைமையில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் “ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர் பகுதி விவசாயி மகன் நான். பயிர்கள் சேதம் அடைந்ததால் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருந்த என்னை எனது தந்தை விரட்டிவிட்டார். மூன்று குழந்தைகளுடைய எனக்கு இப்போது வேலை கிடையாது. இப்போது எப்படி வீடு திரும்புவேன் எனக் கூறுங்கள்? அதனால், எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விவசாயி தற்கொலை சம்பவத்தைத் தடுக்க தில்லி முதல்வரோ, ஆம் ஆத்மி கட்சியினரோ போதிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மாக்கன், சச்சின் பைலட், பாஜக மூத்த தலைவர் சம்பித் பித்ரா ஆகியோர் குற்றம்சாட்டினர்.