விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.100 கோடி நஷ்டம் அடைந்த இந்தியன் ரயில்வே

விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.100 கோடி நஷ்டம் அடைந்த இந்தியன் ரயில்வே
punjab
பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் இந்திய ரயில்வே துறைக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, பூச்சிகளின் தாக்குதலால் சேதமடைந்தது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளான 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு, விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் ரயில்வே தண்டவாளத்தில் ஷெட் அமைத்து உட்கார்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தி வருவதால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பஞ்சாப் வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டும் வருகிறது. பஞ்சாப் வழியாக இயக்கப்படும் 336 ரயில்களில் 157 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதர ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்த வகையில் ரயில்வே நிர்வாகத்துக்கு இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெரோஸ்பூர் பிராந்திய ரயில்வே மேலாளர் அனுஜ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply