ஆடை வடிவமைப்பில் அற்புதம் செய்த அம்பத்தூர் சுமதி ஆனந்த்

11‘ப்ளஸ் டூ-ல 85 பர்சன்ட்டுக்கு மேல மார்க் எடுத்தப்போ, ‘என்ன கோர்ஸ் சேரப் போறே?’னு எல்லாரும் கேட்டாங்க. கொஞ்சமும் தயங்காம, ‘டெய்லரிங்’னு சொன்னப்போ, ‘இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் டெய்லரிங்?’னு எக்கச்சக்க அட்வைஸ். ஆனா, என் ஆர்வம் அதில் மட்டும்தானே இருந்துச்சி!”

– சுவாரஸ்யமாகப் பேசுகிறார், சென்னை, அம்பத்தூர் சுமதி ஆனந்த்.

”நான் பிடிவாதமா நின்னு, தரமணியில இருக்கற அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில், டெய்லரிங்ல டிப்ளோமா கோர்ஸ் சேர்ந்தேன். கல்லூரியில் மட்டும்தான் கத்துக்கணும்னு இருக்காம, டி.வி., பத்திரிகை, இன்டர்நெட்னு தேடித் தேடி ஃபேஷன் டிசைனிங் பத்தி கத்துக்கிட்டேன். எல்லா வகையான ஆடைகளையும் புதுமையான டிசைன்களில் என் கற்பனை சேர்த்து தைச்சி பார்த்தேன். கோர்ஸ் முடிச்ச கையோட வீட்டுல கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். அதன் மூலமாவும் நிறைய அனுபவம் கிடைச்சது. கூடவே தொடர்புகளும். கீழ்ப்பாக்கத்தில் இருக்கிற ‘மெனுராணி’ செல்லம்கிட்ட, நிறைய கிராஃப்ட் பொருட்கள் செய்யவும் கத்துக்கிட்டு, அந்த வகுப்புகளும் எடுத்தேன்.

அடுத்த ரெண்டு வருஷத்துல திருமணம் ஆச்சு. கணவர், என் ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் பக்கபலமா இருந்தார். ஆடை வடிவமைப்போட, அந்தந்த ஆடைக்கான நகைகளையும் சேர்த்து செய் யக் கத்துக்கிட்டா, இந்த தொழிலில் மின்னலாம்னு ஃப்ரெண்ட் சொன்ன ஐடியாவை பிடிச்சிக்கிட்டேன்.

நிறைமாத கர்ப்பிணியா, திருமங்கலத்தில் மூணு நாட்கள் ஜுவல்லரி மேக்கிங்  வகுப்புக்குப் போனதை மறக்க முடியாது. சுலபமா உட்கார முடியாது, சட்டுனு எந்திரிக்க முடியாது. ஜுவல்லரிக்கான மெட்டீரியல் வாங்கப் போறது சிரமமா இருக்கும். அப்போவெல்லாம் என் அம்மா மைதிலிதான் துணையா இருந்தாங்க. வகுப்பு முடியுற வரை அங்கயே காத்திருந்து, கூட்டிட்டு வருவாங்க. சிசேரியன் டெலிவரிங்கறதால… உடனடியா வேலை பார்க்க முடியல. மூணு மாசம் வரை என்னை நானே கட்டுப்படுத்திட்டு ஓய்வில் இருந்தேன். அப்புறம் ஜுவல்லரி மேக்கிங் வகுப்பு எடுக்க ஆரம்பிச்சிட்டேன்.

திருமணத்துக்கு முன்ன அக்கா சாந்தியும், தம்பி வெங்கட்டும் என்னோட வேலைகள்ல ஏதாவது திருத்தம் இருந்தா சொல்வாங்க. இப்போ கணவரும் குழந்தையும் சொல்றாங்க. அதனாலதான்… கஸ்டமர்களுக்கு ஆடை வடிவமைப்பையும், அதுக்கு மேட்சான ஜுவல்லரிகளையும் ரொம்ப மெனக்கட்டு செய்து கொடுக்க முடியுது. உதாரணமா, ஒரு டிசைனர் புடவைக்கான பிளவுஸை டிசைன் செய்றதோட, அதில் உள்ள நிறங்கள், ஸ்டோன்களுக்கு மேட்ச்சான செயின், காதணி செட்டை செய்து கொடுப்பேன்.

ஒவ்வொரு வருஷமும் ஆடை, ஜுவல்ஸ் டிரெண்ட் மாறிட்டே இருக்கும். அதில் அப்டேட்டடா இருந்துக்குவேன். அதை முதலில் ஹோம்வொர்க் செய்து பார்த்துட்டு, கஸ்டமர்களுக்கு செய்து கொடுக்கிறதோட, மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன். இதில் இந்தளவுக்கு ஆர்வமும் அர்ப்பணிப்புமா இருக்கறதாலதான், இந்தத் தொழிலை பத்து வருஷமா என் கைவசம் வெச்சிருக்கேன். மாதம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்” என்று ஒரே மூச்சில் பேசிய சுமதி,

”எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கிறோம் என்பதைவிட, இடர்பாடுகள் வந்தாலும் அதில் எந்த அளவுக்கு நம்முடைய அர்ப்பணிப்பை காண்பிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்” என்றார் கண்கள் சிமிட்டியபடி!

Leave a Reply