ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அரசுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பேருந்து ஒன்றுக்கு தற்கொலைப்படையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் ஓடும் பேருந்தில் பயங்கர வெடிகுண்டுகளுடன் ஏறியுள்ளார்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர் அந்த வெடிகுண்டை வெடிக்க சில முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்ததை பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பார்த்துவிட்டார். காசிம் ஹாடோயூம் என்ற பெயரை கொண்ட அவர் உடனே தனது மூன்று வயது மகளை தனது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு, அதிரடியாக செயல்பட்டு தீவிரவாதியுடன் ஓடும் பேருந்தில் இருந்து குதிக்க முயன்றார். இருவருக்கும் இடையே கடும் போராட்டம் நடந்த நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து இருவருமே கீழே விழுந்தனர். இந்த சமயத்தில் தீவிரவாதி வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த வெடிகுண்டு சம்பவம் காரணமாக பேருந்தில் காசிம் ஹாடோயூம், தீவிரவாதி உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவேளை காசிம் இந்த தியாகசெயலை செய்யாமல் இருந்திருந்தால் பேருந்தில் இருந்த சுமார் 40 பயணிகளும் மரணம் அடைய நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காசிம் அவர்களின் உயிர்த்தியாகம் குறித்து சிரியா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றது.