தலையில் முக்காடு போடாததால் பதவியை இழந்த இரான் பெண் எம்.பி
ஈரான் நாட்டை சேர்ந்த பெண் எம்.பி. மினோ கலேகி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இஷ்பகான் என்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது தலையை மறைக்கும் துணி (கெட்ஸ்கார்ப்) அணியாமல் இருந்ததாக இணையதளங்களில் போட்டோக்கள் வெளியானது.
வெளியிடங்களுக்கு செல்லும் ஈரான் பெண்கள் தலையை மறைக்கும் துணி அணிவது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக கருதப்படும் நிலையில் பெண் எம்.பி. மினோ கலேகி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அவர் கூறும்போது, ‘இந்த போட்டோக்கள் போலியானவை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை அந்நாட்டு நீதித்துறை அமைப்பு ஏற்கவில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. எனவே மினோ கலேகியின் எம்.பி. பதவி ஏற்க முடியாது என அறிவித்தது. அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.