ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்த கிரீஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு முழுவதும் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பொருளாதார சிக்கல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கிரீசுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தேவையான உதவிகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் படுபாதாளத்தில் சரிந்து கடும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் கிரீஸ் நாடு, பன்னாட்டு நிதியத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறிவிட்டது. எனவே, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும்படி கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகள் ஒருசில நிபந்தனைகளை விதித்தன. இது குறித்து நடந்த பொது வாக்கெடுப்பில் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெரும்பாலான மக்கள் வாக்களித்ததால் கிரீஸ் நாட்டுக்கு சிக்கல் மேலும் அதிகமானது.
பொருளாதார சீரழிவில் இருந்து மீட்க கிரீசுக்கு கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகள் புதிய சிக்கன திட்டத்தை அறிவிக்கும்படி கடும் நெருக்கடி கொடுத்துவந்த நிலையில் இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். இதில் ஐரோப்பிய யூனியனுக்கும் கிரீசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய குழுவின் தலைவராக செயல்பட்ட டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டிற்கு நிதி உதவி அளிப்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், இந்த புதிய ஒப்பந்தம் கிரீஸ் நாட்டின் மீது பல கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்சின் சிரிஷா பதவி பறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய உடன்பாட்டால் கிரீஸ் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவது தவிர்க்கப்பட்டுள்ளது.