கருவில் இருந்து கல்யாணம் வரை. குழந்தைகளுக்கான ஒரு நிதித் திட்டமிடல்.

financial adviceஒரு வீட்டில்  குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டின் மொத்த சூழலும் மாறி விடுகிறது.  அதுவரையில் எப்படியெப்படியோ செலவாகிவந்த பணமும் நேரமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து, குறிப்பிட்ட ஓர் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.

பிறந்த குழந்தையை சரியாகப் பராமரித்து, கல்வி புகட்டி, சகல திறமை களையும் பெற்று மிகச் சிறந்த மனிதனாக வளர்த்தெடுப்பது ஒரு பெற்றோரின் கடமை. கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறமை, சிறந்த பழக்கவழக்கங்களை அவர்களுக்கு சரியான நேரத்தில் தரவேண்டும். இதற்கு ஒரு பெற்றோரிடம் சரியான நிதித் திட்டமிடல் வேண்டும்.

நம் வீடுகளில் குழந்தை பிறந்ததும் அதனைக் கொண்டாடும் மகிழ்ச்சியில்  ஆடைகள், ஆபரணங்களை வாங்கிக் குவிக்கிறோம். இந்த முக்கியத்துவத்தை  குழந்தையின் எதிர்கால நிதி சார்ந்த விஷயங்களுக்கு தருகிறோமா என்றால் இல்லை. குழந்தை வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் காலத்தில்தான் படிப்புக்கு பணம் வேண்டுமே என்று பதை பதைக்கிறோம். கல்விக் கடன் வாங்கி, குழந்தையையும் கடன்காரன் ஆக்கு கிறோம். கல்யாணம் என்று வரும்போது மேலும் கடன் வாங்கி, வாரிசுகளுக்கு சொத்தினை விட்டு செல்வதற்கு பதில் கடனை விட்டுவிட்டுப் போகிறோம்.

மிகச் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு நிதி ஒதுக்கினாலும்  மருத்துவம், கல்வி, எதிர்கால சேமிப்பு என பொத்தாம் பொதுவாகவே திட்டமிடுகிறார்கள். இன்றைய நம் குழந்தைகளை முழுமனிதனாக வளர்த்தெடுக்க புதிய அணுகுமுறையுடன் கூடிய நிதித் திட்டமிடல் வேண்டும். இதுபற்றி நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம்.    

”இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்க்க நாம் வழக்கமான நிதி ஆலோசனை தந்துவிட முடியாது. எது உடனடி தேவை, எது நீண்டகால தேவை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடனடி தேவையில்கூட தனித்தனி செலவுகள் இருக்கிறது. தவிர, பள்ளியில் சேர்ப்பது, தனித்திறமைகளை வளர்ப்பது, உயர்கல்வி, திருமணம் என அந்தந்த காலகட்டங்களில் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடலும் நிறைய உள்ளது” என்றார். பின்னர் அவரே தொடர்ந்தார்.

”முந்தைய தலைமுறையினர் பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பதற்காக செலவு செய்த பணத்தை இன்றைக்கு ப்ரீகேஜியில் மட்டுமே செலவிட நேரிடுகிறது. தவிர, முன்பு எல்லோருக்கும் தெரிந்த படிப்பு டாக்டர் மற்றும் இன்ஜினீயர்தான். ஆனால், இன்று பல படிப்புகள் வந்துவிட்டன.

உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது, அதனால் நாம் மாதாமாதம் சேமிக்கும் சிறிய தொகைகூட கூட்டு வட்டியில் நல்ல பலன் தரும். பெரும்பாலான பெற்றோர்கள் வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்புகிறார்கள். அப்படி ஆசைப்பட்டால், இப்போதைக்கு ஆகிற செலவு மாதிரி மூன்று மடங்கு சேமிக்க வேண்டும். சம்பளம் உயரும் போதெல்லாம் உங்கள் சேமிப்பும் உயர வேண்டும். இப்படி சேமிப்பதற்கு நிச்சயம் ஓர் ஒழுங்கு வேண்டும். நிதித் திட்டமிடல் இருந்தால் இந்த ஒழுங்கு நிச்சயம் இருக்கும்.  இன்றைக்கு உங்கள் குழந்தை இன்ஜினீயரிங் படிக்க ரூ.13 லட்சம் ஆகுமெனில், 18 வருடம் கழித்து படிக்க ரூ.55 லட்சம் ஆகும்.  அதேமாதிரி, உங்கள் குழந்தைக்கு இன்று திருமணம் செய்ய  ரூ.20 லட்சம் ஆகுமெனில், 23 வருடம் கழித்து திருமணம் செய்துவைக்க ரூ.1.20 கோடி தேவையாக இருக்கும்.  

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் எனில், உங்கள் வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது என்கிற தகவல் தெரிந்தவுடனே, அதன் சிறப்பான எதிர்காலத்துக்கு நீங்கள் அவசியம் நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லத்தான்” என்றவர், குழந்தை பிறந்ததும் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன, அடுத்தடுத்த கட்டங்களில் செய்ய வேண்டியது என்ன, தனித்திறமைகளை வளர்த் தெடுப்பது எப்படி, உயர்கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.    

மருத்துவக் காப்பீடுகளில் உடனடியாக குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும். பல மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் குழந்தை பிறந்தவுடன் அதில் சேர்க்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகள் இருந்தால், அதற்கான செலவுகளை ஈடு செய்யும் பாலிசி அல்லது குழந்தைக்கான தடுப்பூசி சார்ந்த மருத்துவ செலவுகளை க்ளைம் செய்துகொள்ளும் பாலிசி என உங்கள் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு பாலிசியை அவசியம் எடுக்க வேண்டும்.

குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தால் நிறுவனத்தின் மூலம் பாலிசியில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே எடுத்துள்ள ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் பிரீமியம் செலுத்தும்பட்சத்தில் குழந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தை பிறந்தபிறகு, நமது அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கணவர் அல்லது மனைவி நாமினியாக இருந்தாலும் குழந்தைகளை நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. வங்கிக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், காப்பீடு போன்றவற்றில் நமக்கான நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவரின் பெயரில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டு இருந்தாலும், முதலீடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுக்கப் பட்டிருந்தாலும் குழந்தையின் பெயரை கட்டாயமாக நாமினியாகச் சேர்க்க வேண்டும். இதனால் பிற்பாடு வரக்கூடிய பல சட்ட சிக்கல்களை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  

திருமணத்துக்குமுன் எடுக்கப்பட்டுள்ள ஆயுள் காப்பீடு பாலிசியில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களை நம்பி புத்தம் புதிய ஜீவன் வந்திருக்கிறது என்கிறபோது அதன் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள பாலிசியின் பலன் மனைவிக்கு கிடைக்கும் என்றாலும், குழந்தை என்கிற கூடுதல் பொறுப்பை உணர்ந்து பாலிசி முதிர்வு தொகையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எடுத்துள்ள ஆயுள் காப்பீடு பாலிசியோடு ரூ.50 லட்சம் கூடுதலாக எடுத்துக் கொள்வது நல்லது. இந்த சீரமைப்பைத் தான் முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

Leave a Reply