சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் மோசடி பிரிவு உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா உள்பட பலர் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தயாரிப்பதற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் வாங்கியிருந்தார். இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் ஜாமீன் கையெழுத்து போட்டார். இந்நிலையில் அபிர்சந்த் நஹார் சமீபத்தில் முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் மோசடி புகார் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் லதா ரஜினிகாந்த், ‘தி பப்ளிஷர்ஸ் அன்ட் பிராட்காஸ்டர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் இந்தியா ‘ என்ற செய்தி நிறுவனத்தின் பெயரில் அறிக்கை வெளியிட்டு ‘ஆட் பீரோ’ நிறுவனத்துடனான பிரச்சினை தொடர்பாக செய்தி வெளியிட 76 ஊடகங்களுக்கு தடை வாங்கினார். ஆனால், தி பப்ளிஷர்ஸ் அண்ட் பிராட்காஸ்டர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் இந்தியா என்ற அமைப்பு பெங்களூருவில் இல்லை என்றும் இந்த அமைப்புக்கும் பெங்களூரு பிரஸ்கிளப்புக்கும் இடையே எவ்வித தொடர்பில்லை என்றும் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆட் பீரோ நிறுவன தலைவர் பெங்களூரு நீதிமன்றம் ஒன்றில் லதா ரஜினிகாந்தை எதிர்த்து தவறான ஆவணங்கள், மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் ஆகிய புகார்களைக் கூறி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த கோரிக்கையின்படி லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.