கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது முசாஃபர் நகரில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாஜக தலைவர் அமித் ஷா மீது தொடரப்பட்ட வழக்கில், நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை மையமாக வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கடந்த ஏப்ரல் மாதத்தில் முசாஃபர்நகர் என்ற இடத்தின் அருகே உள்ள பிஜ்னோர் மற்றும் ஷாம்லி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, பொதுமக்களிடையெ வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புகார் அளித்திருந்தன.
இந்த பிரச்சார கூட்டத்தில் அமீத்ஷா, கடந்த 2013 ஆம் ஆண்டு வன்முறையில் ஜாட் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டுமென்றால் அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக பிரச்சார வீடியோவும் தாக்கல் செய்யப்பட்டது.
இப்புகார் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்த போலீசார், இன்று அமித் ஷா மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூது மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டதோ அதே பிரிவின் கீழ் அமித் ஷா மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.