ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து
முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வளாகத்தை சுற்றிலும் படர்ந்திருந்த காய்ந்த புற்களில் தீ பற்றியதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிறுசேரி நிலைய அதிகாரி கே.காளிமுத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுசேரியில் இருந்து மட்டுமின்றி கூடுதலாக திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், செங்கல்பட்டு நிலையங்களில் இருந்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஏக்கர் கணக்கில் இருக்கும் புற்களில் தீப்பற்றியதால், தீயை அணைக்கும் பணி கடும் சவால் நிறைந்ததாக அமைந்தது. இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணி நடந்துகொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து சிறுசேரி நிலைய அதிகாரி கே.காளிமுத்து கூறுகையில், “பல ஏக்கர் பரப்பளவுக்கு தீ ஆக்கிரமித்து இருக்கிறது. முதற்கட்டமாக பங்களாவுக்குள் தீ பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. போம் கலவை (ரசாயன நுரை கலவை) கொண்டு தீயை அணைக்க போராடி வருகிறோம். முழுமையாக தீயை கட்டுப்படுத்துவது உடனடியாக முடியாத காரியம். அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தீ பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
சிறுதாவூர் பங்களா வளாகத்தில் கடந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை இதேபோல தீ விபத்து நடந்து உள்ளது. எனவே இதற்கு ஏதேனும் சமூக விரோத செயல் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.