ஓடும் பஸ்சில் ‘திடீர்’ தீ

ஹாசனில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

மாலை 5.15 மணியளவில் யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் ரோட்டில் பஸ் வந்தது.

அப்போது திடீரென்று பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்தது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டார்.

தீப்பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு படையினர் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.

ஆனாலும், அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் என்ஜீனில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply